மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த் மாகாணத்தில் உள்ள குயின்டாலப் கடற்கரையில் நிகழ்ந்த துணிச்சலான சம்பவம் உலகளவில் கவனம் பெற்றுள்ளது. கடலில் சிக்கிய தன் தாய், தம்பி, தங்கையை காப்பாற்றுவதற்காக சுமார் 4 மணி நேரம் கடும் அலைகளுக்கு மத்தியில் நீந்திச் சென்ற 13 வயது சிறுவனை ஆஸ்திரேலிய மக்கள் “சூப்பர் ஹ்யூமன்” என பாராட்டி வருகின்றனர்.
ஜோவான் ஆப்பிள்பீ (47) என்பவர், தனது மூன்று குழந்தைகள் ஆஸ்டின் (13), பியூ (12), கிரேஸ் (8) ஆகியோருடன் விடுமுறைக்காக குயின்டாலப் கடற்கரைக்கு சென்றிருந்தார். நீண்ட துடுப்புடன் கூடிய ‘பேடில் போர்டு’ படகில் பயணம் செய்தபோது, எதிர்பாராத விதமாக பலத்த காற்றும் பெரிய அலைகளும் எழுந்தன. இதனால் அவர்கள் கரையிலிருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவுக்கு இழுத்துச் செல்லப்பட்டு, அனைவரும் கடலில் விழுந்தனர்.
அந்த நெருக்கடியான சூழலில், தாயின் வேண்டுகோளின்படி ஆஸ்டின் கரையை நோக்கி நீந்தி சென்று உதவி கேட்க முடிவு செய்தார்.
ஆரம்பத்தில் லைஃப் ஜாக்கெட்டுடன் நீந்திய அவர், அது தடையாக இருந்ததால் அதை கழற்றி வீசி, கடும் அலைகளை எதிர்த்து மேலும் இரண்டு மணி நேரம் நீந்தி, மொத்தம் சுமார் 4 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு கரையை அடைந்தார்.
கரையை சென்றடைந்த உடன், தாயின் கைப்பையில் இருந்த மொபைல் போனை பயன்படுத்தி அவசர உதவி மையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகள் மூலம் தேடுதல் பணி தொடங்கப்பட்டது.
பின்னர், கரையிலிருந்து சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவில், 10 மணி நேரமாக ஒரே பேடில் போர்டில் தொங்கி கொண்டு உயிருக்கு போராடிய குடும்பத்தினர் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்
.அவர்கள் அனைவரும் லைஃப் ஜாக்கெட் அணிந்திருந்ததால் உயிர் தப்பினர்.
துணிச்சலான இந்த சிறுவனின் தியாகமும் தைரியமும் ஆஸ்திரேலியாவை மட்டுமல்லாது உலக மக்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.