"நாடார் சமுதாய மக்களுக்கு கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் 15 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு 21 நாடார் அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று (25.02.2026) காலை 11 மணியளவில் சந்தித்து ஆதரவு கடிதத்தை வழங்கினர்.
இந்நிகழ்வு, அதிமுக வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சித. செல்லப்பாண்டியன் ஏற்பாட்டில் நடைபெற்றது. நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் இ.எம். சீனிவாசன் தலைமையில், பல்வேறு சமூக மற்றும் இளைஞர் அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

சந்திப்பின் போது,
நாடார் சமுதாயத்திற்கு கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் 15% இடஒதுக்கீடு
ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத்துதல்
234 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் அதிமுக அமைப்புகளில் உரிய பிரதிநிதித்துவம்
சென்னை விமான நிலையத்தில் காமராஜர் திருவுருவ சிலை அமைத்தல்
தூத்துக்குடி விமான நிலையத்திற்கு பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெயர் சூட்டுதல் மற்றும் சிலை அமைத்தல்
தாமிரபரணி ஆற்றை சீரமைத்தல்
பனைமர தொழிலாளர்களுக்கு கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதி
உடன்குடி அனல் மின் நிலையத்தில் தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு முன்னுரிமை வழங்குதல்
உள்ளிட்ட கோரிக்கை மனுவை வழங்கி 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு முழு ஆதரவு அளிப்பதாக இந்த அமைப்பினர் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் அகில இந்திய நேதாஜி இளைஞர் முன்னேற்றப் படை, காமராஜர் நற்பணி இயக்கம், அகில இந்திய நாடார் சங்க பேரமைப்பு, புதிய மக்கள் தமிழ்தேசம் உள்ளிட்ட 21 அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், அதிமுக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.