அந்த வகையில், தமிழ்நாடு வானிலை நிலவரங்களை எளிய மொழியில், துல்லியமாக மக்களிடம் கொண்டு சேர்ப்பவர் ‘தென்காசி வெதர்மேன்’ ராஜா. அரசு வானிலை ஆய்வு மையங்களின் அறிவிப்புகளைக் காட்டிலும், குறிப்பாக மழைக்காலங்களில், அவரது வானிலை கணிப்புகள் தென் தமிழக மக்களிடையே பெரும் நம்பிக்கையை பெற்றுள்ளன.
தமிழ்நாட்டின் இயற்கை அழகுமிக்க தென்காசி மாவட்டம், குற்றாலம் அருகே உள்ள செங்கோட்டையில் பிறந்த ராஜா, தனது பள்ளிக் கல்வியை தூத்துக்குடி மாவட்டம் காயாமொழியில் முடித்தார். தொடர்ந்து திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் உயிரியலில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்கள், சாத்தான்குளத்தில் இளம் அறிவியல் ஆசிரியர் பட்டம், மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் முதுகலை ஆசிரியர் கல்விப் பட்டம் என மொத்தம் 4 பட்டங்களைப் பெற்றவர். எட்டு ஆண்டுகள் தொடர்ச்சியாக உயர்கல்வி பயின்ற அவர், தற்போது கல்லூரி பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
2017ஆம் ஆண்டு முதல் வானிலை தொடர்பான தனது பயணத்தை தொடங்கிய ராஜா, ஆரம்பத்தில் அதிக கவனம் பெறவில்லை. ஆனால், காலப்போக்கில் அவரது கணிப்புகள் தென் தமிழக மக்களிடையே பரவலாக அறியப்பட்டன.
திருப்புமுனை – நெல்லை–தூத்துக்குடி வெள்ளம்
2023 டிசம்பர் மாதம் நெல்லை–தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்பட்ட பெரும் வெள்ளம், அவரது வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.
அந்த வெள்ளப்பெருக்கை முன்கூட்டியே துல்லியமாக கணித்ததால், தென் மாவட்டங்களில் தவிர்க்க முடியாத வானிலை ஆய்வாளராக அவர் உருவெடுத்தார். சமூக ஊடகங்களிலும் அவர் பெரும் கவனம் பெற்றார்.
இதுகுறித்து ராஜா கூறுகையில்,
“நான் வானிலை நிபுணர் அல்ல. ஒரு துறையில் ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்தால் நிபுணராகலாம். ஆனால் வானிலை அப்படி அல்ல. காலம் மாறும்போது இயற்கையும் மாறுகிறது. எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் நான் என்னை நிபுணர் என சொல்ல மாட்டேன். ஒவ்வொரு பருவமும் இயற்கை ஒரு புதிய பாடத்தை கற்றுத் தருகிறது. அதை எந்த தொழில்நுட்பத்தாலும் முழுமையாக கணிக்க முடியாது. என் அனுபவத்தை மட்டுமே மக்களுடன் பகிர்கிறேன்” என்று எளிமையாக தெரிவிக்கிறார்.
இயற்கையை ஆசானாகக் கொண்டு, அனுபவத்தை வழிகாட்டியாகக் கொண்டு பயணிக்கும் ‘தென்காசி வெதர்மேன்’ ராஜா, மென்மேலும் வளர்ந்து மக்களுக்கு பயனளிக்க வாழ்த்துவோம்.