சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக நீதி, பெரியார் மண் என்று பேசி திராவிடக் கொள்கைகளைக் கொண்ட கட்சிகள் தமிழ்நாட்டை ஆண்டு வந்த போதிலும், தமிழக அமைச்சரவையில் பட்டியல் சமுதாயத்திற்கான பிரதிநிதித்துவம் என்பது தொடர்ச்சியாகக் குறைவாகவே இருந்து வந்துள்ளது என்பது வரலாற்று உண்மை.
பொதுவாக, திராவிடக் கட்சிகளின் ஆட்சிக் காலங்களில் அமைச்சரவையில் ஒன்று அல்லது இரண்டு பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் மட்டுமே இடம்பெற்று வந்தனர். கடந்த திமுக ஆட்சியில் அதிகபட்சமாக மூன்று பேர் இந்தச் சமூகத்தில் இருந்து அமைச்சர்களாகப் பொறுப்பு வகித்தனர். ஆனால், அவ்வாறு வாய்ப்பு வழங்கப்பட்ட போதும் அவர்களுக்கு முக்கியத்துவம் இல்லாத, பின்தங்கிய துறைகளே ஒதுக்கப்பட்டு வந்ததாகக் குற்றச்சாட்டுகள் நிலவின.
நடிகர் விஜய் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற போது நடைபெற்ற அமைச்சரவைப் பதவியேற்பு விழாவில், பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்த எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜ் மோகன் பள்ளி கல்வித்துறை போன்ற மிக முக்கியத்துவம் வாய்ந்த துறையின் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து இன்று நடைபெறுகின்ற அமைச்சரவை விரிவாக்கத்தில் மேலும் 6 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்கின்றனர். இதன் மூலம் விஜய் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பட்டியல் சமூக அமைச்சர்களின் மொத்த எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
"சமூக நீதி", "பெரியார் மண்" என்று மேடைகளில் பேசிப் பேசியே ஆட்சிக் கட்டிலைப் பிடித்த திராவிடக் கட்சிகளின் மாயையை உடைக்கும் விதமாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.
ஒரே நேரத்தில் 7 பட்டியல் சமூக உறுப்பினர்களுக்கு விஜய் அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டிருப்பது தமிழக அரசியலில் பெரும் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.
அதே நேரத்தில், காலங்காலமாகத் திராவிடப் பாரம்பரியம் பேசி வந்த பாரம்பரிய திராவிடக் கட்சிகளுக்கு விஜய்யின் இந்த அதிரடி அரசியல் நகர்வு ஒரு பேரிடியாகவும் சவாலாகவும் அமைந்துள்ளதாகப் பொதுமக்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.