உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. காலை 7.40 மணி முதல் 8.10 மணிக்குள் கும்பாபிஷேக நிகழ்வுகள் நடைபெற உள்ளதால், தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் மதுரையை நோக்கி வருகின்றனர்.
‘மீனாட்சி கோவில்’ என்றே மக்களால் அன்புடன் அழைக்கப்படும் இத்திருத்தலம், பல நூற்றாண்டுகள் பழமையான வரலாறு, சிற்பக்கலை, கட்டிடக்கலை மற்றும் தனித்துவமான வழிபாட்டு முறைகளைக் கொண்டது.
வரலாற்றுச் செய்திகளின்படி, சுல்தானியப் படையெடுப்பால் கோவில் சேதமடைந்த பின்னர் விஜயநகரப் பேரரசின் குமார கம்பண்ணர் கோவிலைச் சீரமைத்து, மீனாட்சி சந்நிதிக்கு கும்பாபிஷேகம் நடத்தியதாகக் கூறப்படுகிறது. பின்னர் சுவாமி சந்நிதிக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
1878-ம் ஆண்டு முதல் கோவில் முழுவதற்கும் பல்வேறு காலகட்டங்களில் கும்பாபிஷேகங்கள் நடைபெற்றுள்ளன. 1923, 1963, 1974, 1995 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளிலும் கும்பாபிஷேகங்கள் நடைபெற்றுள்ளன.
மீனாட்சிக்கே முதல் மரியாதை
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தனிச்சிறப்புகளில் முக்கியமானது, அன்னை மீனாட்சிக்கு வழங்கப்படும் முதல் மரியாதையாகும். மீனாட்சிக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்ற பின்னரே சுந்தரேசுவரருக்கு அபிஷேகம், பூஜைகள் நடைபெறும் வழக்கம் உள்ளது.
கோவிலுக்கு வரும் பக்தர்களும் முதலில் மீனாட்சி அம்மனை வழிபட்ட பின்னரே சுந்தரேசுவரரை தரிசிப்பது தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
திருஞானசம்பந்தர் பாடிய ‘அங்கையற்கண்ணி உடனுறையும் அலவாய் அண்ணலே’ என்ற தேவார வரிகள், பழங்காலத்திலேயே மீனாட்சியும் சுந்தரேசுவரரும் மதுரையில் இணைந்து வழிபடப்பட்டதை எடுத்துக்காட்டுவதாகக் கருதப்படுகிறது.
தாமரை வடிவில் மதுரை
மதுரை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றி அமைந்துள்ள வீதிகள், தமிழ் மாதங்களின் பெயர்களைக் கொண்டுள்ளன. கோவிலும் அதனைச் சுற்றியுள்ள நகர அமைப்பும் தாமரைப்பூ வடிவத்தை ஒத்ததாக அமைந்துள்ளது என்பது மற்றொரு தனிச்சிறப்பாகும்.
சுமார் 1,800 ஆண்டுகளாக பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு மன்னர்கள் மற்றும் ஆட்சியாளர்களின் பங்களிப்புடன் சிறுகச் சிறுக வளர்ந்து, இன்று பிரமாண்டமான திருக்கோவிலாக மீனாட்சி அம்மன் கோவில் திகழ்கிறது.
17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற உள்ள மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. வரலாற்றுச் சிறப்பும் ஆன்மிகப் பெருமையும் கொண்ட மீனாட்சி அம்மன் – சுந்தரேசுவரரை தரிசிக்க பக்தர்கள் பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.