
இந்தத் திருத்தலத்தின் பிரதான மூலவர் ‘வைத்தமாநிதி பெருமாள்’. ஆதிசேஷன் மீது புஜங்க சயனத்தில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் இவர், தன் தலைக்குக் கீழே மரக்காலை (நிதி அளக்கும் கருவி) வைத்து, செல்வத்தை பாதுகாக்கும் கோலத்தில் காட்சி தருவது இத்தலத்தின் தனிச்சிறப்பு.
புராணக் கதையின்படி, செல்வத்தின் அதிபதியான குபேரன் தன் இழந்த நிதிகளை இத்தலத்தில் இறைவனை வழிபட்டு மீட்டதாக நம்பப்படுகிறது. இதனால், இழந்த செல்வத்தை மீட்கவும், நிதிநிலை உயரவும் பக்தர்கள் இங்கு பிரார்த்தனை செய்ய வருகின்றனர். நவநிதிகளை அருகிலேயே வைத்துக் காத்து அருள்புரிவதால், ‘நிதிகளை வைத்திருப்பவர்’ என்ற பொருளில் ‘வைத்தமாநிதி’ என்ற பெயர் பெற்றார்.

மாசி மாத சுக்லபட்ச வளர்பிறை துவாதசி அன்று, குபேரன் செல்வத்தை மீட்ட தினமாகக் கருதி சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. அன்றைய தினம் ஏராளமான பக்தர்கள் திரளாக வந்து தங்கள் தொழில் சம்பந்தமான பொருட்கள், ஆபரணங்கள்,பணம் ஆகியவற்றை பெருமாளின் மரக்காலில் வைத்து வழிபாடு செய்வது வழக்கம்.
இந்த சிறப்பு வாய்ந்த வைபவம் நாளை நடைபெறுகிறது. ,அதிகாலை முதலே பக்தர்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கப்படுவார்கள் , கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தொடர்ச்சியாக அன்னதானமும் வழங்கப்படுகிறது.
ஸ்ரீவைகுண்டம் அருகில் அமைந்துள்ள இத்தலம், தாமிரபரணி கரையின் ஆன்மிக ஒளியாக திகழ்கிறது. செவ்வாய் தோஷ நிவர்த்தி மற்றும் செல்வ வளம் வேண்டி பக்தர்கள் தவறாமல் தரிசிக்கும் தலமாக திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோயில் விளங்குகிறது.