குஜராத் முதல்-மந்திரி மற்றும் நாட்டின் பிரதமர் என அரசியல் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதையொட்டி டெல்லியில் நடைபெற்ற ‘சேவா ஜோதி’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், தன் மீதான நம்பிக்கைக்கு இந்திய மக்களுக்கு தலைவணங்குவதாகவும், மக்களே தனக்கு கடவுள் என்றும் கூறினார். கடினமாக உழைக்கும் பா.ஜ.க. தொண்டர்களே தனது பலம் என குறிப்பிட்ட அவர், இன்றும் தன்னை ஒரு மாணவனாகவே கருதுவதாக தெரிவித்தார்.
2001-ம் ஆண்டு குஜராத் முதல்-மந்திரியாக பொறுப்பேற்றபோது 25 ஆண்டுகள் அரசாங்கத் தலைவராக பணியாற்றுவேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை என்றும், மக்கள் வழங்கிய சேவை வாய்ப்பே இந்தப் பயணத்திற்கு காரணம் என்றும் பிரதமர் கூறினார்.
2047-க்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவது, நாட்டை தன்னிறைவு அடையச் செய்வது, உலகின் முதல் 3 பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியாவை மாற்றுவது ஆகியவை முக்கிய இலக்குகள் என பிரதமர் தெரிவித்தார். மேலும், இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக உருவாக்குவதுடன், எதிர்காலத்தில் ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதும் இலக்காக இருக்கும் என்றார்.
இந்த இலக்குகளை அடைய அனைவரின் முயற்சியும் உற்சாகமும் தேவை என்றும், இந்தியாவின் 140 கோடி மக்களிடமும் சவால்களுக்கு தீர்வு காணும் திறன் உள்ளது என்றும் அவர் கூறினார்.
“இது ஓய்வெடுக்கும் நேரம் அல்ல”
25 ஆண்டுகால அரசியல் பயணம் தனிப்பட்ட பெருமைக்கான விஷயம் அல்ல என்றும், உயரிய நோக்கத்திற்காக தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். இந்தியா எதிர்கொள்ளும் சவால்களை ஒன்றிணைந்து எதிர்கொண்டு, 2047-க்குள் வளர்ந்த இந்தியா என்ற கனவை நிச்சயமாக நிறைவேற்றுவோம் என்றார்.
வாக்கு வங்கி அரசியலால் சமூகம் பிளவுபடுவது நாட்டின் முக்கிய சவால்களில் ஒன்று எனக் குறிப்பிட்ட பிரதமர், பிரச்சினைகள் அனைவருக்கும் பொதுவானவை என்றால் அதற்கான தீர்வும் அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
“140 கோடி மக்களும் இணைந்து 2047-க்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவோம். இதை நாம் சாதிப்போம்” என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.