வல்லநாடு ஆற்றுப்படுகையில் குறைந்த நீர்மட்டத்தை நேரில் ஆய்வு செய்து, ஹிட்டாச்சி மூலம் கூடுதல் நீர் எடுக்க நடவடிக்கை – திங்கட்கிழமை மாலை முதல் மாநகரம் முழுவதும் சீரான குடிநீர் விநியோகம்
தூத்துக்குடி மாநகராட்சிக்கு வல்லநாட்டில் இருந்து குடிநீர் கொண்டு வரும் மெயின் பைப் லைன் மற்றும் நான்காவது குடிநீர் திட்டத்தின் மெயின் வால்வு உடைப்பு ஏற்பட்டதால் கடந்த 6-ம் தேதி முதல் மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. தற்போது உடைப்பு சீரமைப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளன.
இதனிடையே, வல்லநாடு ஆற்றுப்படுகையில் போதிய மழை இல்லாததால் நீரின் அளவு வெகுவாக குறைந்துள்ளது. மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு தொடர்ந்து தடையின்றி குடிநீர் வழங்குவது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை மேயர் ஜெகன் பெரியசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
தொடர்ந்து வல்லநாடு கலியாவூர் பம்பிங் ஸ்டேஷனுக்கு சென்று அங்கு கிடைக்கும் நீரின் வரத்து குறித்து பணியாளர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் ஆற்றுப்படுகையில் ஹிட்டாச்சி இயந்திரம் மூலம் குறிப்பிட்ட பகுதிகளில் தோண்டி, கூடுதல் நீரை சேகரித்து பம்பிங் ஸ்டேஷனுக்கு அனுப்பும் பணியை பார்வையிட்டார்.
அப்போது, திடீரென வல்லநாடு ஆற்றுக்குள் இறங்கிய மேயர் ஜெகன் பெரியசாமி, அங்கு கிடைக்கும் நீரின் ஆழத்தை நேரடியாக ஆய்வு செய்தார். ஆற்றில் கிடந்த கம்பை பயன்படுத்தி நீரின் ஆழத்தை அளந்து பார்த்த அவர், தற்போதுள்ள நீரின் அளவு மழைக்காலம் வரும் வரை போதுமானதாக இருக்காது என அதிகாரிகளிடம் தெரிவித்தார்.எனவே, ஹிட்டாச்சி மூலம் மேலும் ஆழமாகவும், கூடுதல் பரப்பிலும் தோண்டி நீரை அதிக அளவில் பம்பிங் ஸ்டேஷனுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இதையடுத்து ஆற்றுப்படுகையில் தொடர்ந்து ஹிட்டாச்சி மூலம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் பம்பிங் ஸ்டேஷனுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. பின்னர் பம்பிங் ஸ்டேஷனுக்கு மீண்டும் சென்ற மேயர், அங்கு பொருத்தப்பட்டுள்ள மீட்டரில் நீரின் வரத்து அளவை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் மேயர் ஜெகன் பெரியசாமி கூறியதாவது:
மாநகராட்சி பகுதிகளுக்கு தொடர்ந்து எந்தவித தடையுமின்றி குடிநீர் வழங்கப்பட்டு வந்த நிலையில், மெயின் பைப் லைன் மற்றும் மெயின் வால்வு உடைப்பு காரணமாக கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. தற்போது உடைப்பு சீரமைப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளன.
தற்போது வல்லநாட்டில் இருந்து தூத்துக்குடி மாநகராட்சிக்கு 50 சதவீத குடிநீர் வந்து கொண்டிருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை இரவு அல்லது திங்கட்கிழமை காலைக்குள் 100 சதவீத குடிநீர் வரத்து கிடைக்கும். திங்கட்கிழமை மாலை முதல் மாநகராட்சி முழுவதும் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும்.
ஆற்றுப்படுகையில் நீரின் அளவு குறைவாக இருப்பதால், அதுவரை பொதுமக்கள் கிடைக்கும் குடிநீரை குடிநீர் தேவைக்கு மட்டும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். குடிநீரை வீணாக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.
பைப் லைன் உடைப்பு ஏற்பட்ட பின்னர் மோட்டார் இயக்கப்பட்டபோது ஆற்றுப்படுகையில் நீரின் அளவு மிகவும் குறைவாக இருந்ததால் பம்பிங் மோட்டார் முழுமையான திறனில் இயங்கவில்லை. ஆரம்பத்தில் ஆற்றுப்படுகையில் இருந்து 32 எம்.எல்.டி. தண்ணீர் மட்டுமே கிடைத்து வந்தது. தற்போது ஹிட்டாச்சி மூலம் ஆற்றுப்படுகையில் தொடர்ந்து தோண்டப்பட்டு வருவதால் 55 எம்.எல்.டி. தண்ணீர் பம்பிங் ஸ்டேஷனுக்கு வந்து கொண்டிருக்கிறது.
திங்கள்கிழமை மாலைக்குள் தூத்துக்குடி மாநகராட்சிக்கு தேவையான 82 எம்.எல்.டி. முழு கொள்ளளவு தண்ணீர் கிடைக்கும். அதன் பின்னர் மாநகராட்சி பகுதிகளில் எந்தவித குடிநீர் தட்டுப்பாடும் இல்லாமல் சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்றார்.
ஆய்வின்போது உதவி செயற்பொறியாளர் லெனின், இளநிலை பொறியாளர் செல்வம், குழாய் ஆய்வாளர்கள் பாலு, குமார், மாநகராட்சி பணிக்குழுத் தலைவர் சுரேஷ்குமார், கவுன்சிலர் கனகராஜ், பகுதி செயலாளர் ரவீந்திரன், முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.