சினிமாவில் நடித்த விஜய் தற்போது சட்டமன்றத்தில் நடிக்கிறார். சிரிப்பதும் அழுவதும் எங்கே என்று தெரியாத அளவுக்கு அமைச்சர்கள் முதல் தவெக எம்.எல்.ஏ.க்கள் வரை செயல்பட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி வடக்கு தெற்கு மாவட்ட அதிமுக ஜெயலலிதா பேரவை ஆலோசனை கூட்டம் தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநில ஜெ பேரவை செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆா்.பி உதயகுமாா் தலைமை வகித்தனா். வடக்கு தெற்கு மாவட்ட ஜெ பேரவை நிா்வாகிகள் மணிகண்டன் மாாியப்பன் சுந்தா் கண்ணன் சுரேஷ்பாபு முத்துராமலிங்கம் மனுவேல்ராஜ், அமிா்தா மகேந்திரன் முரசொலி மாறன் செல்வராஜ் முத்துச்சாமி கிருபானந்த முருகன் கருப்பசாமி நாகேந்திரன், மாாிமுத்து பாண்டியன் பிரதீப் காளிதாஸ் ரத்தினசபாபதி அந்தோணி சேவியா் மாாியப்பன் சோமசுந்தரம் அமலதாசன் ஜீவா பாண்டியன் வில்சன் பாபு ஐயப்பன் செண்பகராஜ் பொன்னுத்துரை வேல்முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டசெயலாளா்கள் விஜயகுமாா் வரதராஜ பெருமாள் ஆகியோா் வரவேற்புரையாற்றினாா்கள்.
தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் முக்கியமான கூட்டமாக இது உள்ளது. அதிமுக வெற்றிக்காக ஓராண்டுக்கு முன்பே தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டு, பூத் கமிட்டிகளை அமைத்து களப்பணியாற்றினார்.
நான் நான்கு தேர்தல்களை சந்தித்து, மூன்று முறை வெற்றி பெற்று அமைச்சராகவும் பணியாற்றியுள்ளேன்.
கட்சி தொடங்கி இரண்டு ஆண்டுகளிலேயே பல்வேறு தகவல்களை பரப்பி விஜய் ஆட்சிக்கு வந்துள்ளார்.
தமிழ்நாட்டுக்காக அவர் என்ன செய்தார்? ஜீவாதார உரிமை பிரச்சினைகளுக்காக ஏதேனும் சாதனை அல்லது தியாகம் செய்துள்ளாரா? எதுவும் கிடையாது.
எடப்பாடி பழனிசாமி அனைவரிடமும் எளிமையாக பழகி, அவர்களின் கருத்துகளை கேட்டறிந்து ஆட்சி நடத்தினார்.
நான்கரை ஆண்டுகால ஆட்சியில் 11 மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கினார். 7.5 சதவீத இடஒதுக்கீடு மூலம் மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் வாய்ப்பு கிடைக்க வழிவகுத்தார். கொரோனா காலத்தில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், ஆறு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.
காவிரி மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டியது அரசின் கடமை. விவசாயிகளுக்கு தேவையான தண்ணீர் கிடைக்காததால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சிறப்பு நிவாரணம் வழங்க வேண்டும்.
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் விவசாயிகள் பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பும்போது, சிறப்பு தொகுப்பு வழங்கப்பட்டுவிட்டதாக முதலமைச்சர் கூறுகிறார். சிறப்பு தொகுப்பு வேறு, நிவாரண உதவி வேறு என்பதை கூட புரிந்துகொள்ளாமல் எதிர்க்கட்சிகளிடம் நாளிதழ்களை படியுங்கள் என்று கூறுவது வேதனையாக உள்ளது.
தமிழக மக்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருப்பவர்கள் தேவையற்ற விவகாரங்களில் கவனம் செலுத்துவது வருத்தமளிக்கிறது. சட்டமன்றத்திற்கு என்று பல்வேறு மரபுகள் உள்ளன. முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் அலங்கரித்த அந்த இடத்தின் மரபுகளை பொறுப்பில் உள்ளவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தின்போது மீனவர்களுக்கு தடைக்கால உதவித்தொகை ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று விஜய் வாக்குறுதி அளித்தார். ஆனால் தற்போது ரூ.7 ஆயிரமாக உயர்த்தப்படும் என கூறுகிறார்.
தமிழக மக்களுக்காக எந்த உழைப்பும் இல்லாமல் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதில் அதிமுகவைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏ.க்களின் வாக்குகளும் அடங்கும். திமுக கூட்டணி கட்சிகளை அழைத்துக்கொண்டு அமைச்சரவையில் இடம் அளித்து, பொதுவுடைமை கட்சிகளுக்கு உரிய அங்கீகாரம் அளிக்காமல் செயல்படும் இந்த ஆட்சி நீண்ட காலம் நீடிக்காது.
சினிமாவில் நடித்த விஜய் தற்போது சட்டமன்றத்தில் நடிக்கிறார். சிரிப்பதும் அழுவதும் எங்கே என்று தெரியாத அளவுக்கு அமைச்சர்கள் முதல் தவெக எம்.எல்.ஏ.க்கள் வரை செயல்பட்டு வருகின்றனர். ‘ஜனநாயகன்’ படத்தை பார்த்துவிட்டு அமைச்சர்கள் முதல் எம்.எல்.ஏ.க்கள் வரை அழும் நிலை ஏற்பட்டுள்ளது. கேட்டால் விஜய் நடித்த கடைசி படம் என்று கூறுகிறார்கள். இத்தனை ஆண்டுகள் சினிமாவில் நடித்துவிட்டு தற்போது முதலமைச்சராக சட்டமன்றத்திலும் நன்றாகவே நடித்துக் கொண்டிருக்கிறார்.
தேர்தலுக்கு முன்பு விஜய் பேசியதும், தேர்தலுக்குப் பிறகு முதலமைச்சரான நிலையில் அவர் நடந்து கொள்வதும் முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. அதிமுகவைச் சேர்ந்த 47 எம்.எல்.ஏ.க்களில் 25 பேர் உங்கள் ஆட்சிக்கு ஆதரவாக சென்றிருப்பது எந்த வகையில் நியாயம்? இரண்டரை கோடி அதிமுக தொண்டர்கள் இதை மன்னிக்க மாட்டார்கள்.
தேர்தலுக்கு முன்பு பேசிய கருத்துகளுக்கும், தற்போது ஆட்சியில் செயல்படும் விதத்திற்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. பல்வேறு கேள்விகளுக்கு சட்டமன்றத்தில் உரிய பதில் கிடைப்பதில்லை. சட்டமன்றத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கும், அதற்கு வழங்கப்படும் பதில்களுக்கும் சம்பந்தமே இல்லாத நிலை உள்ளது.
ஆலோசகர்களுக்கு அரசுப் பதவி வழங்கப்பட்டதாக கூறப்பட்டாலும் அதற்கான அரசாணை வெளியிடப்படவில்லை.
மாலை 6 மணிக்கு மேல் பார்க்க முடியாத முதலமைச்சர் என்று கூறப்படும் நிலையில், அவர் பேசும் வசனங்கள் அனைத்தும் சினிமாவில் பார்ப்பது போன்று உள்ளது.
இந்த ஆட்சியின் சாதனை என்று பார்த்தால் பெயர் மாற்றம், தலைமைச் செயலகத்தை முதலமைச்சருக்காக மாற்றியது ஆகியவை மட்டுமே தெரிகிறது. விஜய்யின் ‘விசில் புரட்சிக்கு’ விரைவில் முடிவு கட்டப்படும் என்று ஆர்.பி. உதயகுமார் பேசினார்.
கூட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன், முன்னாள் அமைச்சா் சித.செல்லப்பாண்டியன் மாநில நிா்வாகிகள் பிரபு, ஹென்றி பெருமாள்சாமி ஆறுமுகநயினாா் மாவட்ட அவைத்தலைவா் திருப்பாற்கடல் இணைச்செயலாளர் சந்தனம் முன்னாள் எம்.எல்.ஏ மோகன், வடக்கு மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் கோசல்ராம் ராஜா, ஒன்றிய செயலாளர்கள், லட்சுமண பெருமாள், காசிராஜன், அழகேசன். ராஜ் நாராயணன் சௌந்திரபாண்டி அப்பாத்துரை தனஞ்செயன் பால்ராஜ் போடு சாமி தனவதி ஜவஹா் சண்முகவேல் பகுதி செயலாளர்கள் சேவியா் ஜெய்கணேஷ் சுடலைமணி மாவட்ட அணி நிா்வாகிகள் விக்னேஷ் நடராஜன் நிலாசந்திரன் பெருமாள் தனராஜ் ராஜா பிரபாகா் ராஜேந்திரன் துரைசிங், முன்னாள் மேயா் அந்தோணி கிரேஸ், முன்னாள் கவுன்சிலர் தங்கத்துரை,வக்கீல்கள் ஆண்ட்ரூமணி சுகந்தன் ஆதித்தன் மற்றும் பாலஜெயம் சாம்ராஜ் சகாயராஜ் சங்கா் ஐயப்பன் உள்பட வடக்கு தெற்கு மாவட்டத்தை சோ்ந்த பலா் கலந்துகொண்டனா். பகுதி செயலாளர் முருகன் நன்றியுரையாற்றினாா்.