தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் கடந்த சில நாட்களாக ஏற்பட்ட குடிநீர் பிரச்சனையை தீர்க்க தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சருமான ஸ்ரீநாத் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் குழாய்களில் ஏற்பட்ட உடைப்பு மற்றும் மெயின் வால்வு பழுது உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பழுதுகளை சரிசெய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது குடிநீர் விநியோகம் படிப்படியாக சீரடைந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக அமைச்சர் ஸ்ரீநாத் தூத்துக்குடியில் இருந்தபோதிலும், குடிநீர் பிரச்சனை தொடர்பாக மாநகராட்சி ஆணையர் அல்லது அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தவில்லை என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், தூத்துக்குடி மாநகராட்சிக்கு குடிநீர் வரும் முக்கிய நீராதாரமான வல்லநாடு ஆற்றுப்படுகையிலும் தற்போது போதிய அளவு தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் அமைச்சர் நேரடியாக வல்லநாடு பகுதிக்குச் சென்று நிலைமையை ஆய்வு செய்து, குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக ஸ்ரீநாத் தேர்ந்தெடுக்கப்பட்டு 100 நாட்கள் கடந்துள்ள நிலையில், தொகுதி மக்களின் அடிப்படை தேவைகள் தொடர்பாக போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்ற அதிருப்தியும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
குறிப்பாக குடிநீர் போன்ற அத்தியாவசிய பிரச்சனை ஏற்பட்டுள்ள நேரத்திலும், தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நேரடியாக தலையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காணாதது ஏன் என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதுதொடர்பாக தமிழக முதலமைச்சருக்கும் புகார் மனு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தொகுதி மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளித்து, குறிப்பாக குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண அமைச்சர் ஸ்ரீநாத் இனியாவது நேரடியாக களத்தில் இறங்குவாரா? என்பது தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாகவும், கேள்வியாகவும் உள்ளது.