தூத்துக்குடி மாவட்டத்தில் 2026–2027ம் கல்வியாண்டிற்கான நகர்ப்புற அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
இதில் தூத்துக்குடி விக்டோரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பல்வேறு போட்டிகளில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
வாலிபால், தடகளம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மாணவிகள் பங்கேற்று வெற்றி பெற்று சான்றிதழ்கள் பெற்றனர்.
இதில் ஜெருஷா, ஜாக்குலின் சாராள், மதனா, காவியா, காருண்யா, பாலதர்ஷினி, திவ்யதர்ஷினி, லக்ஷனா உள்ளிட்ட மாணவிகள் சிறப்பிடம் பெற்றனர்.
மேலும், தூத்துக்குடி மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்ற பள்ளி மாணவிகள், மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான கபில்கிளப் வாலிபால் போட்டியில் 2-ம் இடத்தையும், காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற கபாடி போட்டியில் 4-ம் இடத்தையும் பெற்று சாதனை படைத்தனர்.
இதனிடையே, தமிழ்வழிக் கல்வியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவி அபிநயாவுக்கு இந்திய வியாபாரிகள் சங்கம் சார்பில் பரிசுத்தொகையும் பாராட்டும் வழங்கப்பட்டது.
பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவிகள், உடற்கல்வி இயக்குநர் மற்றும் ஆசிரியர்களை பள்ளி தாளாளர் சுதன்கீலர், பள்ளி தலைமை ஆசிரியை மெர்லின் பாக்கியவதி உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டினர்.