தூத்துக்குடி வஉசி சந்தை ஐக்கிய வியாபாரிகள் சங்க மகாசபை கூட்டம் சங்க அலுவலகத்தில் தலைவர் அன்புராஜ் தலைமையில், செயலாளர் செந்தில்குமார் முன்னிலையில் நடைபெற்றது. பொருளாளர் மரகதராஜ் வரவேற்புரையாற்றினார்.
கூட்டத்தில் சங்கத்தின் ஆண்டு அறிக்கை மற்றும் வரவு–செலவு கணக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், சங்க வளர்ச்சிக்கான பல்வேறு பணிகளை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் தலைவர் அன்புராஜ், செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் மரகதராஜ் ஆகியோர் பேசுகையில், வளர்ந்து வரும் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருவதால், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டு வருகின்றன.
பல்வேறு அமைப்புகளின் புகார்களின் அடிப்படையிலும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதன்படி வஉசி சந்தை பகுதியிலும் உள்ள சில ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளுமாறு மாநகராட்சி அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து, மாநகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு வஉசி சந்தை ஐக்கிய வியாபாரிகள் சங்க உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி, நமது தொழிலுக்கு நாமே பாதுகாப்பு என்ற அடிப்படையில் செயல்படுவோம் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தொடர்ந்து, சங்கத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட உறுப்பினர்களுக்கு ‘உழைப்பின் சிகரம்’ விருது வழங்கப்பட்டது. மேலும், உறுப்பினர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டன.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக வணிகர்கள் சங்க பேரவை மாவட்டத் தலைவர் சோலையப்பராஜா, பொருளாளர் ஆனந்தகுமார், ஐக்கிய வியாபாரிகள் சங்க துணைத்தலைவர்கள் பட்டுராஜா, சண்முகராஜ், துணைச்செயலாளர்கள் கஷ்மீர், செல்வசேகர், உத்திரபாண்டி, கௌரவ ஆலோசகர்கள் செல்வக்குமார், சண்முகம், கதிரேசன், குருசாமி, ஜோசப் மற்றும் நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும், ஐக்கிய நாடார் சங்க செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டனர்.