தூத்துக்குடி அருகே மீளவிட்டான் பகுதியில் புதிய டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கடந்த 9 நாட்களாக நடத்தி வந்த தொடர் போராட்டம், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலையீட்டால் முடிவுக்கு வந்தது.
அப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கப்படாது என்று சப் கலெக்டர் விவேக் யாதவ் உறுதியளித்தார்.
மீளவிட்டான் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்ததைத் தொடர்ந்து, அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதையடுத்து, போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு நேரில் சென்ற மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, பொதுமக்களிடம் அவர்களின் கோரிக்கைகள் மற்றும் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, சப் கலெக்டர் விவேக் யாதவைத் தொடர்புகொண்டு பிரச்சினை குறித்து எடுத்துரைத்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து அங்கு வந்த சப் கலெக்டர் விவேக் யாதவ், மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, மீளவிட்டான் பகுதியில் இந்த இடத்தில் டாஸ்மாக் கடை அமைக்கப்படாது என்று உறுதியளித்தார். மேலும், டாஸ்மாக் பொது மேலாளர் மூலம் கடை அமைப்பது ரத்து செய்யப்பட்டதற்கான கடிதம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதனால், கடந்த 9 நாட்களாகத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பொதுமக்கள் நிம்மதியடைந்தனர். தங்களது கோரிக்கையை நேரில் கேட்டறிந்து, அதிகாரிகளுடன் பேசி உடனடியாகத் தீர்வு காண நடவடிக்கை எடுத்த மேயர் ஜெகன் பெரியசாமிக்கும், உறுதியளித்த சப் கலெக்டர் விவேக் யாதவுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
இந்த நிகழ்வின்போது திமுக மாமன்ற உறுப்பினர் கீதா முருகேசன், சுற்றுச்சூழல் அணி மாவட்ட துணை அமைப்பாளர் முத்துராமன், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.