தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அண்ணாநகர் பகுதியில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடைபெற்று வரும் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளிலும் எந்தவித பாரபட்சமும் இன்றி மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் பெறப்படும் புகார்கள் பதிவு செய்யப்பட்டு, அவற்றின் அடிப்படையில் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மாநகராட்சியில் 2,000-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மற்றும் 150-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலம் தினமும் வீடுகளிலிருந்து தேவையற்ற கழிவுகள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், தினசரி சுமார் 180 டன் கழிவுகள் சேகரிக்கப்படுவதாகவும் கூறினார்.
மக்கும் கழிவுகள் உரம் தயாரிக்கவும், மக்காத கழிவுகள், பிளாஸ்டிக், மின்னணு மற்றும் மருத்துவக் கழிவுகள் உள்ளிட்டவை முறையாக பிரிக்கப்பட்டு தருவைகுளம் குப்பைக் கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
பொதுமக்கள் தேவையற்ற கழிவுகளை கழிவுநீர் கால்வாய்கள், பக்கிள் ஓடை உள்ளிட்ட நீர்வழித்தடங்களில் கொட்டாமல், வீடுகளுக்கு நேரடியாக வரும் தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக மேயர் தெரிவித்தார்.
சிலர் கால்வாய்களில் கழிவுகளை கொட்டுவதால், மழைக்காலங்களில் அவை அடைப்புகளை ஏற்படுத்தி நீரோட்டம் தடைபடுவதாகவும், இதைத் தவிர்க்க பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும், மாநகராட்சி பகுதியில் உள்ள பக்கிள் ஓடை மற்றும் உப்பாற்று ஓடையுடன் இணைந்த கழிவுநீர் வழித்தடங்கள் மூலம் மழைநீர் மற்றும் கழிவுநீர் கடலுக்கு செல்லும் வகையில் பணிகள் முறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், புதிதாக 14 கழிவுநீர் வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
கடந்த காலங்களில் மழைக்காலங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டு, தற்போது ஒவ்வொரு பகுதியிலும் சுழற்சி முறையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அவை முழுமையாக நடைமுறைக்கு வரும் வரை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
“மழை என்றாலே அச்சப்படும் நிலை மாறி, மக்கள் நிம்மதியாக இருக்கும் சூழலை உருவாக்கியுள்ளோம். எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் மழைநீர் செல்ல வேண்டிய இடத்திற்கு தடையின்றி செல்லும் வகையில் அனைத்து நீர்வழித்தடங்களும் சீரமைக்கப்பட்டு வருகின்றன. எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை” என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
ஆய்வின்போது சுகாதார ஆய்வாளர் ராஜபாண்டி, போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பலர் உடனிருந்தனர்.