தூத்துக்குடி மாநகராட்சியில் LR காப்பி (Land Record Copy) வழங்கும் நடைமுறையில் விதிமீறல்கள் நடைபெற்றுள்ளதா என்பது குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் வலியுறுத்தியுள்ளார்.
நகர்ப்புறங்களில் நிலங்களை பத்திரப்பதிவு செய்வதற்கான முக்கிய ஆவணங்களில் LR காப்பியும் ஒன்றாகும். நிலத்தின் சர்வே எண், உட்பிரிவு, பரப்பளவு, வகைப்பாடு உள்ளிட்ட பதிவுசார் விவரங்களை அறிந்து கொள்ளவும், நிலம் தொடர்பான பல்வேறு பணிகளுக்கும் இந்த ஆவணம் பயன்படுத்தப்படுகிறது.
தூத்துக்குடி மாநகராட்சி மூலம் பொதுமக்களுக்கு LR காப்பி வழங்கப்பட்டு வரும் நிலையில், கடந்த பிப்ரவரி மாதத்திலேயே இனி பழைய முறையில் கையால் எழுதப்பட்ட ஆவணங்களை வழங்காமல், ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் முறையில் மட்டுமே LR காப்பி வழங்க வேண்டும் என வருவாய்த்துறை AD அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அந்த அறிவுறுத்தலுக்குப் பின்னரும் மாநகராட்சி மூலம் கையேடு முறையில் LR காப்பி வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுவது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
பிப்ரவரி மாதத்திற்கு முன்பே விண்ணப்பிக்கப்பட்டதாக கூறப்படும் மனுக்களின் அடிப்படையில்தான் தற்போது கையேடு முறையில் LR காப்பிகள் வழங்கப்படுகிறதா? அவ்வாறு இருந்தால் அந்த விண்ணப்பங்கள் உண்மையில் எப்போது பெறப்பட்டன? யார் அனுமதி வழங்கினர்? எந்த அதிகாரத்தின் அடிப்படையில் தற்போது ஆவணங்கள் வழங்கப்படுகின்றன? என்பது குறித்து மாநகராட்சி நிர்வாகம் வெளிப்படையாக விளக்க வேண்டும்.
மேலும், பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு கையால் எழுதப்பட்ட LR காப்பியை பயன்படுத்தி பத்திரப்பதிவு செய்யக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அதன்பிறகும் சார்பதிவாளர் அலுவலகத்தில் எந்த அடிப்படையில் பத்திரப்பதிவு நடைபெற்றது என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். இதனால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதா என்பதையும் கண்டறிய வேண்டும்.
LR காப்பி வழங்குவதற்கு அனுமதி வழங்கிய அதிகாரி யார்? எந்த கோப்பின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது? சம்பந்தப்பட்ட கோப்புகளில் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன? என்பது குறித்து முழுமையான ஆய்வு நடத்த வேண்டும்.
விதிமீறல் அல்லது தவறு நடைபெற்றது உறுதி செய்யப்பட்டால், அதற்கு பொறுப்பான அதிகாரிகளை கண்டறிந்து, அவர்கள் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், LR காப்பி வழங்கும் நடைமுறையை முழுமையாக டிஜிட்டல் முறைக்கு மாற்றி, விண்ணப்பித்த தேதி, அனுமதி வழங்கிய அதிகாரி, ஆவணம் வழங்கப்பட்ட தேதி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் வெளிப்படையாக பதிவாகும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சித்ராங்கதன் தெரிவித்துள்ளார்.