தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ.12,000 அபராதமும் விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு, தூத்துக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 14 வயதுடைய இரண்டு சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக வடக்கு காரசேரி பகுதியைச் சேர்ந்த 26 வயது நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி திருமதி பிரீத்தா, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.12,000 அபராதமும் விதித்து இன்று (ஜூன் 24) தீர்ப்பளித்தார்.