தூத்துக்குடி மாவட்டம் கே.பி. தளவாய்புரம் கிராமத்தைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர் சுடலைமணி (31), அஸ்ஸாம் மாநிலத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது வீர மரணமடைந்தார்.
கே.பி.தளவாய்புரம் ஊரைச் சேர்ந்த செந்தட்டி (எ) மூக்காண்டி என்பவரின் மகனான சுடலைமணி, இந்திய ராணுவத்தின் அஸ்ஸாம் ரைபிள்ஸ் பிரிவில் பணியாற்றி வந்தார்.
நாட்டின் எல்லைப் பாதுகாப்புப் பணியில் சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில், பணியில் இருந்தபோதே அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
வீரர் சுடலைமணிக்கு மேலக்கூட்டுடன்காடு பகுதியைச் சேர்ந்த பேச்சியம்மாள் என்ற மனைவியும், செந்தட்டி (6) என்ற மகனும், ரேணுகா (3) என்ற மகளும் உள்ளனர்.
சுடலைமணியின் வீர மரணச் செய்தி கே.பி. தளவாய்புரம், மேலக்கூட்டுடன்காடு உள்ளிட்ட பகுதிகளில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடலை விமானம் மூலம் சொந்த ஊருக்குக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. உடல் ஊருக்கு வந்தடைந்த பின்னர், முழு ராணுவ மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.