தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு முற்றிலும் சீர்குலைவு
தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதாகவும், தவெகவினரின் மிரட்டல் மற்றும் அட்ராசிட்டி சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் திமுக முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளருமான கீதா ஜீவன் குற்றம்சாட்டினார்.
தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர்,
“தவெக அரசு அறிமுகப்படுத்தியதாக கூறப்படும் ‘சிங்கப்பெண் காவல்துறை திட்டம்’ புதிய திட்டமல்ல. அது ஏற்கனவே திமுக ஆட்சிக் காலத்தில் சிறப்பாக செயல்பட்ட திட்டம். தற்போது அதற்கு வெறும் ஸ்டிக்கர் ஒட்டி புதிய திட்டம் போல விளம்பரம் செய்கின்றனர். அதன் தொடக்க விழா கூட விஜய்யின் சினிமா ஆடியோ வெளியீட்டு விழா போல நடைபெற்றது” என்று விமர்சித்தார்.
மேலும், “பெண்கள் பாதுகாப்பைப் பற்றி மேடைகளில் பேசும் முதல்வர் விஜய், தனது கட்சியைச் சேர்ந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான விவகாரத்தில் இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்? சம்பந்தப்பட்ட தவெக கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன்?” என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், “தவெக அமைச்சர்கள் ஆய்வு என்ற பெயரில் செல்போனில் வீடியோ எடுத்து ரீல்ஸ் வெளியிட்டு வருகின்றனர். அவர்கள் இன்னும் ரீல்ஸ் மனப்பான்மையில் இருந்து வெளியே வரவில்லை.
தொழிற்சாலைகள் மற்றும் டாஸ்மாக் கடைகளில் தவெகவினர் மிரட்டி பண வசூலில் ஈடுபடுகின்றனர்” என்றார்.
தமிழகத்தில் நிலவும் மின்தட்டுப்பாட்டிற்கு தவெக அரசின் நிர்வாகச் சீர்கேடுகளே காரணம் என்றும், ஊடகச் சுதந்திரத்தை பறிக்கும் வகையில் 3 முக்கிய தொலைக்காட்சி சேனல்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் கீதா ஜீவன் குற்றம்சாட்டினார்.
மேலும், “எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக மிகவும் பொறுப்புடனும் ஆக்கப்பூர்வமாகவும் செயல்பட்டு வருகிறது” என்றும் தெரிவித்தார்